தான் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும் அணியில் இருந்த இசைக்கலைஞர்களின் நலனில் அக்கறை உள்ளவராக இருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று கூறி ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் பின்னணிப் பாடகி சித்ரா.
திரையுலகில் 25,000 பாடல்கள் பாடி, ஆறு தேசிய விருதுகள் வென்றவர் சித்ரா. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான பிரபல மொழிகளிலும் தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்தவர். அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக கோலோச்சி வரும் சித்ரா, பத்ம பூஷன் விருது பெற்றவர்.
பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் முதல் நினைவு நாளை ஒட்டியும், தனது இசைப் பயணம் தொடர்பாகவும் பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணல்: பின்னணி பாடகியாக திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் ஆகிறது. கடினமான இந்த இசைத்துறையில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியும் என நினைத்தது உண்டா? அப்போது உங்கள் லட்சியம் என்னவாக இருந்தது?
“திரைத்துறையில் பின்னணி பாடகியாக வரவேண்டும் என நிச்சயம் நான் எதிர்ப்பார்க்கவில்லை. இசையை நான் முக்கிய பாடமாக எடுத்து நான் கற்றதற்கு காரணம் எதாவது ஒரு கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ இசை ஆசிரியையாக பணி புரிய வேண்டும் என்பதுதான். என்னுடைய நண்பர்கள் பலர் இன்று இசை ஆசிரியர்களாக இருக்கின்றனர். என்னுடைய அம்மா, அப்பா இருவருமே இசை ஆசிரியர்கள்தான்.
என்னுடைய குரு டாக்டர். ஓமணக்குட்டி அவர்களுடைய சகோதரர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் அகில இந்திய வானொலியில் இசை இயக்குநராக இருந்தார். அவர் எங்களுடைய குடும்ப நண்பரும் கூட. அவர்கள் திருவனந்தபுரத்தில் ஒரு இசை ஸ்டுடியோ ஆரம்பித்தார்கள். அங்கு பாடல் பதிவு ஆரம்பித்தபோது அங்கே உள்ளவர்களுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கலாம் என்று யோசித்ததன் விளைவாக எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அந்த வாய்ப்பு வந்தது.