பெண்களுக்கு எதிராக இணையத்தில் பின்தொடரும் பாலியல் தொல்லைகள் பொதுவெளியில் பெரும் விவாதங்களை கடந்த வருடங்களில் உருவாக்கி வந்தநிலையில், அத்தகைய பிரச்னையை சமீபத்தில் எதிர்கொண்டதாக பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான செளந்தர்யா சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
“பொதுவாக, நான் சமூக வலைதளங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு பதில் தர மாட்டேன். சமீபத்தில்தான் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தேன் என்பதால், நிறைய பேர் உதவி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாங்க. அதுக்கு பதில் தந்துட்டு இருக்கும் போதுதான், தவறான நோக்கத்தோட ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. எடுத்ததுமே அதுல, ‘என்கூட படுக்க வரியா?’ என அனுப்பி தவறான புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார்கள்.
இதே மாதிரியான தவறான குறுஞ்செய்தி ஒரு ஆண்டுக்கு முன்பு வந்தது. ‘உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன் கன்னத்தை கிள்ளனும்’ அப்படிங்கற ரீதியில ரொம்ப தப்பான முறையில சொல்லியிருந்தாரு. நம்ம மேல பலருக்கும் அன்பு இருக்கலாம். ஆனா, அதை வெளிப்படுத்தறதுக்கு ஒரு முறை இருக்குதுல்ல. அதுவே இங்கே தப்பா இருந்தது. யார் அதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காக அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்கும் போதுதான், மதுரையில இருக்கக்கூடிய ஒரு கல்லூரி பேராசிரியர் அப்படிங்கறது எனக்கு தெரிய வந்தது. அதை பார்த்ததும் ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டேன். ஏன்னா, ஒரு ஆசிரியரா இருந்துட்டு அவர்கிட்ட படிக்கக்கூடிய மாணவர்களோட நிலையை நினைச்சு பார்த்து எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அதனாலதான் அந்த குறுஞ்செய்தியை என்னுடைய பக்கத்துல பகிர்ந்தேன். அதை பார்த்துட்டு எனக்கு பலரும் துணையா நின்னாங்க அதே சமயம் அதற்கும் அதிகமாவே எனக்கு மிரட்டலும் வந்தது” என்கிறார் சௌந்தர்யா.
“இன்னும் சிலபேர் என்கிட்ட வந்து, ‘இதெல்லாம் போட்டு ஏன் உங்க நல்ல பேரை கெடுத்துக்கறீங்க?’ன்னுலாம் கேட்டாங்க. இப்படி ஒரு விஷயம் நடக்கும் போது தப்பு செஞ்ச சம்பந்தப்பட்ட ஆட்களை கண்டிக்கனுமே தவிர, பாதிக்கப்பட்டவங்க கிட்ட வந்து இந்த மாதிரி பேசறது என்ன மாதிரியான மனநிலைன்னு தெரியல. ‘இதேமாதிரி நாளைக்கு உனக்கும் நடக்கலாம், அப்போ பயப்படாம பிரச்சனைய எப்படி கையாளனும்’னு உங்க வீட்டு பொண்ணுங்களுக்கும் நீங்க சொல்லித்தரலாம். அதுமட்டுமில்லாம, ‘அய்யோ, இந்த மாதிரி நமக்கும் நடக்கும்’ன்னு ஆண்கள் இது போன்ற தப்பு பண்ண பயப்படலாம். இதுதான் விஷயம்.