டிக்கிலோனா’: சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை – என்ன நடந்தது?

டிக்கிலோனா’: சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை – என்ன நடந்தது?

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘டிக்கிலோனா’.

இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகள், பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது? தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தின் இரண்டாம் அலை தணியத் தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

‘தலைவி’, ‘லாபம்’ ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாக ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியிலும் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த படங்களோடு நடிகர் சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படம் நேரடியாக ஜீ5 தமிழ் (Zee5 Tamil) ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த கதையில் இடம் பெற்றுள்ள சில வசனங்களும், காட்சிகளும்தான் தற்போது சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன.

ஹாக்கி விளையாட்டு வீரராக விரும்பும் சந்தானம், இந்த படத்தில் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவர் நினைத்தபடி ஹாக்கி வீரராக முடியாமல் போக தான் விரும்பிய ப்ரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதன் பின்பு அவருக்கு மின் வாரியத்தில் வேலை கிடைக்கிறது. இதனால், மனைவியுடன் தொடர்ந்து சண்டை வர ஒரு கட்டத்தில் கால எந்திரத்தில் பயணிக்கும் வாய்ப்பு திடீரென கிடைக்கிறது. அதில் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பயணிக்கிறார் சந்தானம்.

கடந்த காலத்துக்கு பயணம் செய்து தனது திருமணத்தில் நடந்த தவறை சரி செய்கிறார் சந்தானம். தான் காதலித்த ப்ரியாவுடனான திருமணத்தை நிறுத்தி விட்டு, தன்னை விரும்பிய மற்றொரு பெண்ணை திருமணம் செய்கிறார். பின்பு இந்த கதையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.