நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத்.
‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு அஜீத்தும் எச். வினோத்தும் இணைந்திருக்கும் படம் இது. அஜீத்தின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றுகூடச் சொல்லலாம். எச். வினோத்தின் முந்தைய படங்களான ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன்: அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ படங்கள் சிறப்பாக அமைந்திருந்ததும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிகாரர். தம்பிக்கு வேலையில்லை. இந்தச் சூழலில் சென்னையில் பெரும் குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. சங்கிலி பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான நிகழ்வுகள், கொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடக்கின்றன.
இந்தக் குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு அர்ஜுனுக்கு வழங்கப்படுகிறது. மூன்று குற்றங்களையும் செய்வது ஒரே கும்பல் என்பதைக் கண்டுபிடிக்கிறார் அர்ஜுன். புலனாய்வு முக்கிய கட்டத்தை நெருங்கும்போது ஒரு திருப்பம். அர்ஜுனின் குடும்பமே பெரும் அபாயத்தில் சிக்குகிறது. அர்ஜுன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.