போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திரைப்பட உலகில் மீண்டும் போதை மருந்துகள் கலாசாரம் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை எந்த பிரபல நட்சத்திரமும் போதை மருந்து விவகார்ததில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனாலும் பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரமாக அறியப்படும் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் பெயர் சமீபத்திய சிக்கலில் தொடர்புபடுத்தப்பட்டு அவர் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.
கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையினர் மும்பையில் ஒரு சொகுசு கப்பலில் சோதனை நடத்தியது. அப்போது அதில் இருந்த ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை அதிகாரிகள் பிடித்தனர். அதைத்தொடர்ந்து இதில் ஆரியன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஒரு நாள் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
கப்பலில் போதைப்பொருள் இருந்ததாகவும் அதை பறிமுதல் செய்ததாகவும் கூறிய அதிகாரிகள், சம்பவ நேரத்தில் ஆர்யன் தரப்பில் இருந்து போதைப்பொருளை பறிமுதல் செய்யவில்லை என்றும் கூறினர். ஆனால், அதற்காக அவரை இந்த வழக்கில் இருந்து ஒதுக்கிவிட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பிபிசி மராத்தி செய்தியாளர் மயங்க் பாகவத், ஆர்யன் கானின் வழக்கறிஞர் பேசியபோது, அவரும் ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.