நடிகர்கள்: சிமு லியு, டோனி லியுங், ஆவ்க்வாஃபினா, ஃபலா சென், மெங்கர் ஜாங், மிச்செல் யோவ்; இயக்கம்: டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஹீரோக்களின் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கும் பாத்திரமான ஷாங் – சியின் முழு நீள சாகசம் இது. சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்பட வரிசையில் 25வது படம் இது.
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் கதைத் தொடர்ச்சியாக இந்தக் கதை நடக்கிறது என்றாலும் அந்தக் கதைக்கும் இதற்கும் பெரிய உறவில்லை. இந்தப் படத்தின் கதை இதுதான்: டென் ரிங்க்ஸ் அமைப்பின் தலைவனான வென்வூ, தன்னிடம் உள்ள வளையங்களின் சக்தியால் உலகை கட்டியாள்கிறான். நடுவில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவன் மனைவி இறந்துவிடுகிறாள். ஆனால், மனைவி ஏதோ ஒரு இடத்தில் அடைபட்டுக் கிடப்பதாகக் கருதும் வென்வூ, அந்த இடத்தை திறந்து மனைவியை விடுவிக்க நினைக்கிறான்.
இதற்காக, தன்னிடமிருந்து பிரிந்துசென்றுவிட்ட மகன் ஷாங் – ஷியையும் மகள் ஜியோலிங்கையும் தன்னிடம் வரவழைக்கிறான். ஆனால், வென்வூவின் மனைவி அடைபட்டுக் கிடப்பதாகக் கருதும் இடத்தைத் திறந்தால், அதில் உள்ள ஒரு சக்தி உலகையே அழித்துவிடும். இருந்தபோதும், அந்த இடத்தை திறக்க நினைக்கிறான் வென்வூ. அந்த இடத்தில் உண்மையில் என்ன இருக்கிறது, வென்வூ மனைவியை மீட்டானா, ஷாங் – ஷியும் ஜியோலிங்கும் தந்தையைத் தடுத்தார்களா என்பதெல்லாம் மீதிக் கதை.
சமீபகால மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் உள்ள கதைகளோடு ஒப்பிட்டால், மிகத் தெளிவான கதையைக் கொண்டிருக்கிறது இந்தப் படம். ரொம்பவும் சுருக்கமாகச் சொன்னால், உலகிற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தடுக்க கதாநாயகன் செய்யும் சாகசங்கள்தான் இந்தப் படம். ஆனால், கதாநாயகனுக்கும் வெவ்வேறு விசித்திர சக்திகள், விசித்திர உலகம், விசித்திர மிருகங்கள் என சுவாஸ்யமூட்டியிருக்கிறார்கள். கலகலப்பிற்கும் சாகசத்திற்கும் பஞ்சமில்லாமல் நகர்கிறது படம். தமிழில் பார்த்தாலும் சரி, ஆங்கிலத்தில் பார்த்தாலும் சரி வசனங்கள் சிரிக்கவைப்பது நிச்சயம். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்சில் கடைசியாக வந்த சில படங்கள், ஏகப்பட்ட பாத்திரங்கள் வெவ்வேறு உலகங்கள் என குழப்பிவந்த நிலையில், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு நிற்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தவிர, ஏகப்பட்ட ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் முதல் முறையாக ஒரு ஆசிய சூப்பர் ஹீரோவை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது மார்வெல். ஆகவே, இந்த ஹீரோவுக்கான கதைச் சூழல், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே அதற்கேற்றபடி அமைத்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோ ஷாங் – ஷி என்றாலும்கூட, தந்தை மற்றும் வில்லனாக வரும் வென்வூவின் பாத்திரமே வெகுவாகக் கவர்கிறது. வென்வூவாக நடித்திருக்கும் டோனி லியூங், பிரபல ஹாங்காங் இயக்குனர் வோங் கார் – வாய் படங்களில் நடித்ததன் மூலம் ஆசிய திரையுலகில் அறியப்பட்டவர். இந்தப் படத்தில் அமர்த்தலாக வந்து, அட்டகாசம் செய்திருக்கிறார்.