Naane Varuvean: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘நானே வருவேன்’: முதல் நாளில் இம்புட்டு வசூலா.?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகின. இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்களின் அந்த குறையை போக்கியது.

இதனையடுத்து தனுஷின் ‘நானே வருவேன்’ படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைந்துள்ள இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘நானே வருவேன்’ படம். அண்ணன், தம்பி என இரண்டு விதமான கெட்டப்களில் நடித்துள்ளார் தனுஷ். ஹீரோவாகவும், மிரட்டலான வில்லனாகவும் கலக்கியுள்ளார் தனுஷ். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் வேறலெவலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்தப்படத்திற்கு பெரிய அளவில் படக்குழுவினர் புரோமோஷன் செய்யவில்லை. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் உலகளவில் இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.7.30 கோடி வசூலித்துள்ளதாம். மேலும் அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் ‘நானே வருவேன்’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.