Breaking News


Warning: sprintf(): Too few arguments in /var/www/cineglit.in/data/www/cineglit.in/wp-content/themes/newsreaders/assets/lib/breadcrumbs/breadcrumbs.php on line 252

தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி: பள்ளி, கல்லூரி பற்றிய அறிவிப்பு என்ன? பிற கொரோனா ஊரடங்கு தளர்வுகள் என்ன?

50 சதவீத பார்வையாளர்களுடன் தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. மேலும், கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தற்போது தமிழ்நாட்டில் அமலில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளுக்கான காலம் திங்கள் கிழமை காலை ஆறு மணியோடு முடிவடையும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில் பல்வேறு தளர்வுகளுடன் சில கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் ஆறாம் தேதிவரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மதிய உணவுத் திட்டமும் செயல்படுத்தப்படும். இந்த வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், 15ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளும் செயல்பட அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல அனைத்துக் கல்லூரிகளிலும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல பட்டய படிப்புகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். அங்கு கடை வைத்திருப்பவர்கள் தடுப்பூசிகள் போட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் இரவு 9 மணிவரையே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி பத்து மணிவரை கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.