‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த ஜெயம் ரவி, த்ரிஷா கதாபாத்திரங்களுக்கு பூங்கொத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து வருகிறது.
இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நடந்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’ படம். ரஜினி, ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் கார்த்தி, ஜெயம் ரவியுடன் சேர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்த கமல் படக்குழுவினரை பாராட்டி தள்ளியுள்ளார்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய மலர் கொத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர். இதனை த்ரிஷாவும், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அவர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.